STUDENTS SAVINGS SCHEME

கரூரில் உயர்கல்விக்குச் சேமிக்கும் மாணவர்கள்!

கரூரில் 35 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 6200 மாணவர்களின் பெயர்களில் வங்கிக் கணக்குகள் உள்ளன. இவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் கணக்குகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான தொகையை சேமித்துள்ளனர்.

 

கரூர்… மார்னிங் ஸ்டார் உயர்நிலைப்பள்ளியில் பத்தாவது படிக்கும் மாணவி ப. தேசிகா. இன்று அவரது வங்கிக் கணக்கில் 16 ஆயிரம் ரூபாய் உள்ளது. “என் கல்லூரிக் கல்வியை என் சேமிப்புத் தொகையைக் கொண்டே எதிர்கொள்வேன். என் பெற்றோரை நான் சிரமப்படுத்தமாட்டேன்…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார். ஒரு மாணவி பெயரில் வங்கிக் கணக்கு இருப்பது ஆச்சரியமா என்று கேட்கலாம்.

 

ஒரு மாணவி அல்ல, கரூரில் 35 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 6200 மாணவர்களின் பெயர்களில் இப்படி வங்கிக் கணக்குகள் உள்ளன. இவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் கணக்குகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான தொகையை சேமித்துள்ளனர் என்பது ஆச்சரியமல்லவா? இவர்களுக்கு சேமிப்பின் மீது ஆர்வம் ஏற்படக் காரணம், கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியின் தலைவர் செங்குட்டுவன். அவர் சேமிப்பை ஓர் இயக்கமாகவே வள்ளுவர் கல்வி அறக்கட்டளை மூலம் கரூரில் செயல்படுத்தி வருகிறார்.

 

 

 

கரூர் சுற்றுவட்டார அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்கள் பெயரில் இவரே 100 ரூபாய் டெபாசிட் கட்டி வங்கிக் கணக்கைத் தொடங்கித் தருகிறார். அதன் பிறகு மாணவர்கள் தொடர்ந்து அந்தக் கணக்கில் பணம் செலுத்தவேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் அதிகத் தொகை சேமிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையும் உண்டு. தவிர ஆயிரம் ரூபாய்க்கு மேல் சேமித்த மாணவருக்கு மூன்று நாட்டுக் கோழிக்குஞ்சுகள் கொடுத்து. அதை வளர்ப்பது குறித்துப் பயிற்சியும் தருகிறார்கள். வளர்ந்த கோழிகளை இவர்களே நல்ல விலைக்கு வாங்கிக்கொள்கிறார்கள். மாணவர்கள் சேமிக்க வேண்டும் என்ற செங்குட்டுவனின் நல்லெண்ணம் பொய்க்கவில்லை. மாணவர்கள் ஆர்வத்துடன் சேமிப்பில் பின்னியெடுக்கிறார்கள்.

 

மாணவி தேசிகா தொடர்ந்து கூறினார் : “ஏழாவது படிக்கும்போது எனக்கு அக்கவுண்ட் ஓப்பன் செய்து கொடுத்தாங்க. மறுவருஷமே அதிகமா சேமித்த குழந்தைகளை ஊக்கப்படுத்த பரிசு கொடுத்தாங்க. எல்லாவற்றையும் என் கணக்கில் போட்டுட்டேன். இதுவரைக்கும் 16 ஆயிரம் சேர்த்திருக்கிறேன். என் அப்பா ஒரு டிரைவர். பணக்கஷ்டத்துக்கு நடுவிலும் அவர் கொடுக்கும் காசுகளை நான் வீண் செலவு செய்யாமல் சேமித்ததால்தான் இது சாத்தியமாச்சு” என்கிறார் பொறுப்புடன்.

 

மார்னிங்ஸ்டார் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மா. சித்ராவைச் சந்தித்தோம்.

“2012 -ஆம் ஆண்டு இந்தச் சேமிப்புத் திட்டம் இந்தப் பள்ளியில் முதன்முதலாக ஆரம்பிக்கப் பட்டபோது, 50 மாணவர்கள் சேர்ந்தார்கள். சிறுதுளி பெருவெள்ளம் என்பதுபோல, இன்று அது 500 மாணவர்களாக உயர்ந்துள்ளது. பள்ளியின் ஒவ்வொரு ஆண்டுவிழாவின் போதும் அதிகத் தொகை சேர்த்த குழந்தைகளுக்கு ஊக்கப்பரிசு தருவதுடன் சேமிப்பின் முக்கியத்துவம் பற்றிக் கூறி, சேமித்தால் நாம் உயர்கல்வி கற்கும்போது, பெற்றோர் கடன் வாங்கவேண்டிய அவசியம் இருக்காது என்றும் வலியுறுத்துவார் செங்குட்டுவன் சார். மேலும் மாணவர்கள் ஆண்டுதோறும் இந்தச் சேமிப்புத் திட்டத்தில் ஆர்வத்துடன் சேர்ந்துகொண்டிருப்பது பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. அடுத்த சில ஆண்டுகளில் அனைத்துக் குழந்தைகளும் இந்தத் திட்டத்தில் சேர்ந்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்றார்.

 

இதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஜெனித் கிறிஸ்டோபர், “எங்கப்பா டெய்லர். மாசம் சுமாரா பத்தாயிரம் ரூபாய் சம்பாதிப்பாரு. நான் என் அப்பா அம்மாக்கிட்டே வாரம் நூறு ரூபாய் கொடுத்துடச் சொல்லியிருக்கேன். அவங்க கொடுக்கிற பணத்தைச் சேர்த்து வெச்சு டீச்சர்கிட்டே கொடுத்து பேங்க்கில் போட்டுடுவேன். கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவரைக்கும் முப்பதாயிரம் ரூபாய்

சேர்த்திருக்கேன்” என்கிறார் நம்பிக்கையுடன்.

 

ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் வங்கிக் கணக்குகளை கவனித்துக்கொள்வதற்கென்றே ஆசிரியர் ஒருவரை பொறுப்பாளராக நியமித்துள்ளது. வள்ளுவர் கல்வி அறக்கட்டளை. அவருக்கு மாதந்தோறும் இந்தப் பணிக்காக ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.

 

மார்னிங் ஸ்டார் உயர்நிலைப் பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியை ஜெயராணி, “இந்தச் சேமிப்புத் திட்டத்தை இந்தப் பள்ளியில் என் தலைமையில் நிர்வகித்து வருகிறேன். ஆரம்பத்திலிருந்தே மாணவர்கள் வெகு ஆர்வமாக சேமித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாணவர்களுக்கு எதிர்காலத்தில் உயர்கல்வி படிப்பதற்குத் தேவையான பணம் பற்றிய கவலை இருக்காது. எனக்கு வள்ளுவர் ட்ரஸ்ட் மாதம் 500 ரூபாய் ஊக்கத்தொகை தருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் புதிய வங்கிக் கணக்கு தொடங்கவேண்டும் என்பதில் வெகு ஆர்வமாக இருக்கிறார்கள். இதை மேலும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று எனக்கு ஆர்வமாக உள்ளது. என் மாணவர்கள் அனைவரும் இந்த சேமிப்புத் திட்டம் மூலம் லைஃப் லாங் என்னை நினைச்சுக் கிட்டிருப்பாங்க என்பதை நினைக்கும்போது எனக்கு ஆத்ம திருப்தி ஏற்படுது…” என்றார்.

 

ஸ்ரீ சாரதா பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியை மா. கஸ்தூரி, “இது அழகான திட்டம். பிற்காலத்தில் மாணவர்களது படிப்புக்கும் குடும்பத்தின் தேவைக்கும் இந்தச் சேமிப்புத்தொகை மிகவும் கைகொடுக்கும். இந்தத் திட்டத்தின்கீழ் சென்ற ஆண்டு 25 மாணவிகளும் இந்த ஆண்டு நாற்பது மாணவிகளையும் எங்கள் பள்ளியில் தேர்ந்தெடுத்துள்ளார்கள். சென்ற ஆண்டு கணக்குத் தொடங்கிய மிடில்கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவி, இப்போது ஒரே வருடத்தில் 12 ஆயிரம் சேமித்துள்ளார். இது மற்ற மாணவிகளுக்கு ஊக்கமாக உள்ளது. மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் ‘தினம் பத்து ரூபாய்தானே… கொடுங்க. சேர்த்துவெச்சு பேங்க்ல போடலாம். பின்னால் மேல்படிப்புக்கு உதவியா இருக்கும்’னு கேட்கிறார்கள். பெற்றோர் அதுகுறித்து எங்களிடம் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கும்போது, நாங்கள் மிகவும் மகிழ்கிறோம்.

 

இதுபற்றி மாணவிகளிடம் நாங்கள் பேசும்போது, ‘முன்பெல்லாம் காசு கிடைத்தால் கடையில் தீனி வாங்கித் தின்றுவிடுவோம். இப்போது அப்படி ஓர் எண்ணமே வரவில்லை. அதை அப்படியே வைத்திருந்து வங்கியில் கட்டவேண்டும் என்றுதான் மனம்போகிறது’ என்கிறார்கள். இது ஆரோக்கியமான மன நிலை அல்லவா…” என்கிறார் நெகிழ்ச்சியாக.

 

ஸ்ரீ சாரதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி தி. வைஷ்ணவி,

 

“நாங்க ரொம்ப ஏழ்மையான குடும்பம். நான் என் அப்பாக்கிட்டேயும் தாத்தாக்கிட்டேயும் வாங்கிய காசையெல்லாம் சேர்த்து பேங்கில் கட்டிக்கிட்டு வர்றேன். என்னைப் பார்த்து என் வீட்டில் உள்ள மற்றவர்களும் இப்போ கிடைக்கிற காசை சேர்க்க ஆரம்பிச்சிருக்காங்க. என் எதிர்காலக் கல்லூரிப் படிப்புக்கு நான் சேமித்து வைக்கிற இந்தத் தொகையைக் கொண்டே கடன் வாங்காமல் படிக்க முடியும் என்கிற நம்பிக்கை வந்திருக்கு. வீட்டுக்கு அவசரத் தேவைகள் வந்தாலும் அதிலிருந்து எடுத்து சமாளிக்கலாம்…” என்கிறார்.

 

விவேகானந்தா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிவராமன், “எனக்கு அக்கவுண்ட ஓப்பன் பண்ணி கொடுத்தவுடன் அப்பா கொடுத்த காசையெல்லாம் செலவு பண்ணாம பத்திரமா சேமிச்சு வெச்சேன். நடுவிலே எனக்கு மூணு கோழிக்குஞ்சு கொடுத்தாங்க. அதையும் பத்திரமா வளர்த்து அவை பெரிசான பிறகு, அவங்கக்கிட்டேயே வித்தேன். அதில் ஆயிரம் ரூபாய் கிடைச்சது. அதையும் வங்கியிலேயே போட்டேன். கோழிக்குஞ்சு கொடுக்கும்போது, செங்குட்டுவன் சார் என்ன சொன்னார்னா பெற்றோர்கிட்டே பணம் வாங்கிச் சேமிப்பதுடன் நீங்களே உழைச்சு, அந்தப் பணத்தைச் சேமிக்கப் பழகணும்னு சொன்னாரு. மாணவப் பருவத்திலேயே சொந்தக் காலில் தன்னம்பிக்கையோடு நிற்கணும்னு சொன்னாரு.

 

நீங்க இப்ப சேமிக்கும் பணம் காலேஜ் போகும்போது, பெரிதும் உதவும்னு சொன்னாரு. போன வருஷம்தான் அக்கவுண்ட் ஓப்பன் செய்தேன். இதுவரைக்கும் பத்தாயிரம் ரூபாய் போட்டிருக்கேன். இதே அளவில் சேமிச்சுக்கிட்டு வந்தால் கல்லூரிச் செலவுகளை கடன் வாங்காமலேயே எளிதாகச் சமாளிக்க முடியும்…” என்கிறார்.

 

வள்ளுவர் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் கே.செங்குட்டுவனைச் சந்தித்து இப்படி ஓர் யோசனை எப்படி தோன்றியது என்று கேட்டோம். “இளமை என்பது ஒரு மனிதனுக்கு முக்கியமான காலகட்டம். அந்த இளமையை யார் சரியா பயன்படுத்துறாங்களோ அவங்கதான் வாழ்க்கையில் வெற்றிபெற்று உயர்ந்த நிலைக்கு வர்றாங்க. இளமையிலிருந்து உழைப்பும் சேமிப்பும் ஒரு மனிதனுக்கு அவசியம் தேவை.

 

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள்தான் அதிக வறுமையில் வாடுபவர்கள். அவர்களது முன்னேற்றத்துக்குக் கைத்தூக்கி விடுவதுதான் முக்கியம். வறுமைக்கு அடிப்படைக் காரணம் சேமிப்புப்பழக்கம் இல்லாததே. எனவே மாணவர்களுக்கு சேமிப்பு குறித்த விழிப்புணர்வை அளித்து அவர்களுக்குச் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த நினைத்தேன். வெறும் பிரச்சாரங்களால் மட்டும் அது சாத்தியமில்லை. பிராக்டிக்கலா அவர்கள் மனதில் பதியும்படி இதனைச் செய்ய நினைத்தேன். அப்போதுதான், நாமே அவர்கள் பெயரில் சேமிப்புக்கணக்கு தொடங்கித் தந்து, அந்தக் கணக்குகளை கண்காணித்தால் என்ன என்று தோன்றியது. அதன்படியே செயல்படத் தொடங்கினோம்.

 

அதன்படி ஒவ்வொரு பள்ளியின் அருகிலுள்ள வங்கியில், மாணவனின் பெயரில் நாங்களே டெபாசிட் கட்டி கணக்கு துவங்கிக் கொடுத்தோம். இந்தக் கணக்குகளை ஒழுங்குபடுத்தவும் கண்காணிக்கவும் ஒவ்வொரு பள்ளிக்கும் ஓர் ஆசிரியரைப் பொறுப்பாளராகப் போட்டுள்ளோம். அவர் 15 நாட்களுக்கு ஒரு முறை மாணவர்கள் சேமித்து வைத்துக் கொடுக்கும் தொகையை வங்கியில் சென்று கட்டிவிட்டு ரசீது வாங்கி ஒப்படைத்துவிடுவார்.

 

உழைக்கவும் சேமிக்கவும் பழகிக்கொண்ட சமுதாயத்தின் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. எனவே படிக்கும்போதே பொருளாதார ரீதியாகவும் ஒரு குழந்தை குடும்பத்துக்கு உதவியாக இருப்பது, அந்தக் குழந்தைக்கு குடும்பத்தின் மீதான அக்கறையையும் வீண் செலவு செய்யக்கூடாது என்ற பொறுப்புணர்வையும் தரும். எனவே நாங்கள் ஆயிரம் ரூபாய்க்கு மேல் சேமிக்கும் குழந்தைகளுக்கு மூன்று நாட்டுக் கோழிக்குஞ்சுகள் வழங்குகிறோம். அதை வளர்ப்பதற்கான முறைகளையும் சொல்லித் தருகிறோம்.

 

கோழிக்குஞ்சு வளர்ப்பது சிரமமான காரியமல்ல. நான்கு மாதங்களுக்கு அந்தக் குஞ்சுகளை கவனமாக வளர்த்தால் போதும். வாரந்தோறும் ஞாயிறன்று வள்ளுவர் கல்லூரியில் கூடும் கோழிச் சந்தையில் நாங்களே அந்தக் கோழிகளை நல்ல விலைக்கு வாங்கிக்கொள்கிறோம். அந்தத் தொகையும் அந்தக் குழந்தையின் வங்கிக்கணக்கு சேமிப்பில் செலுத்தப்படுகிறது. படிக்கும்போதே தொழில் முனையும் நோக்கத்தை இதன் மூலம் ஏற்படுத்துவதுடன் பொருளாதாரம் குறித்த பொறுப்புணர்வையும் இதன் மூலம் நாங்கள் மாணவர்கள் மனதில் ஏற்படுத்துகிறோம்.

 

மார்னிங் ஸ்டார் உயர்நிலைப்பள்ளியில்தான் முதலில் இந்தத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தோம். அந்தப் பள்ளி மாணவர்கள் மட்டும் எட்டு லட்ச ரூபாய்க்கு மேல் சேமித்து வைத்துள்ளனர்.

 

இப்போதைக்கு கரூரைச் சுற்றியுள்ள முப்பத்தைந்து பள்ளிகளில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். அடுத்து தமிழக அளவில் செய்யலாம்னு இருக்கோம். இன்றைய நிலையில் மாணவனுக்கு ஃபைனான்ஸ் மேனேஜ்மெண்ட் ரொம்ப முக்கியம். இது தெரியாததால்தான் நிறைய பேர் தவறான பாதைகளுக்குப் போறாங்க,. இந்த வயதில் பணத்தின் மதிப்பை அவர்களுக்கு உணர்த்துவது அவசியம்.

 

இப்ப பார்த்தால் ஐடி துறையில் வேலை பார்ப்பவர்கள் நிறைய சம்பாதிக்கிறார்கள். ஆனால், அவர்களில் பலர் கடன் வாங்கிக்கொண்டு மிகவும் சிரமப்படுவதைப் பார்க்கிறோம். இதற்குக் காரணம் அவர்களுக்கு ஃபைனான்ஸ் மேனேஜ்மெண்ட் தெரியாததுதான். பள்ளியில் படிக்கும்போதே பிராக்டிக்கலாக சேமிப்பு பற்றி மாணவர்களுக்குப் போதிக்கப்பட்டிருந்தால் இத்தகைய நிலை ஏற்பட்டிருக்காது.

 

சேமிக்கும் பழக்கமுள்ளவர்கள் கடன்வாங்க மாட்டார்கள். எனவே எதிர்காலத் தலைமுறை கடனின்றி வளமையான வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற பெரிய நல்லெண்ணம் இந்தத் திட்டத்துக்குப் பின்னணியில் உள்ளது.‘’ என்கிறார் அக்கறை மிகுந்த குரலில்.