பதினான்காவது பன்னாட்டுக் கருத்தரங்கம்

பதினான்காவது பன்னாட்டுக் கருத்தரங்கம்

வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி, கரூர்.

மற்றும் ‘ஆர்’ அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகம் இணைந்து நடத்தும்

பதினான்காவது பன்னாட்டுக் கருத்தரங்கம்

‘ஆர்’ அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகத்தின் “பதினான்காவது பன்னாட்டுக் கருத்தரங்கம்”; கரூர், வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லுரியில் 15.12.2018 மற்றும் 16.12.2018 ஆகிய இருநாட்கள் நடைபெற்றது.

விழாவில் திருநெல்வேலி மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் க.ப.அறவாணன், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ம.திருமலை, சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையின் தலைவர் முனைவர் கோ. இரவீந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

தொடக்கவிழா (15.12.2018)

வள்ளுவர் கல்லூரியின் தாளாளர் திருமிகு. க.செங்குட்டுவன் அவர்கள், “பேராசிரியர்கள் ஒவ்வொருவரும் ஐந்து பேராசிரியர்களையாவது உருவாக்கவேண்டும் என்றும் அறிவு விசாலமடையும் வகையில் அதற்கான முயற்சிகளை எடுத்தால் மட்டுமே திறமை வாய்ந்த மாணவர்களை உருவாக்க முடியும்” என்ற சீரிய கருத்தாக்கத்தோடு தலைமையுரை ஆற்றினார்.
பிரான்சு பொருளாதார மேலாண்மைக் கல்லூரியின் பேரா. ஜே.பி. பிரசாந்த் மோரே, இலண்டன்; தமிழறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் திரு. பொன்னுத்துரை யேசுரத்னம், மோகனூர் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் பேரா.சு.பழனியாண்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் க.ப. அறவாணன் அவர்கள் பதினான்காவது பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் “தமிழ் அறம், தமிழ்ப் பொருள் ஆய்வுக் கோவையை” வெளியிட்டுக் “கருத்தரங்கக் கோவைகளில் இடம்பெற்ற கட்டுரைகளின் தரத்தினைக் கூறி வாழ்த்தியதோடு இளம் ஆய்வாளர்களைப் பாராட்டிச் சிறப்பித்தார்”;.

கருத்தரங்கக் கோவையின் முதற்படிகளைச் சிங்கப்பூர் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் இரத்தின. வெங்கடேசன் மற்றும் திருச்சி மற்றும் துறையூர் சௌடாம்பிகா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சிலோன் டாக்டர் எஸ். இராமமூர்த்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

கருத்தரங்கக் கோவையினைப் பெற்ற முனைவர் இரத்தின. வெங்கடேசன் அவர்கள் “கட்டுரை வழங்கிய பேராளர்கள் தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகளை எழுத வேண்டுமென்றும் அறிவார்ந்த ஆற்றலையும் சிந்தனைகளையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள இதுபோன்ற கருத்தரங்கம் ஏதுவான களம்” எனவும் புகழ்ந்துரைத்தார். இதனைத் தொடர்ந்து கருத்தரங்கச் சிறப்புரையில் முனைவர் ம. திருமலை அவர்கள் “நலிந்து வரும் நம் தமிழ் மொழியையும் தமிழ்ப் பண்பாட்டையும் மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என்றும் தமிழ் இலக்கியங்களில் உள்ள புனைவுகளை விட்டு உண்மைகளை வெளிக் கொணர வேண்டும்” என்றும் தமது கருத்தைப் பதிவு செய்தார்.

தொடக்கவிழாவின் இறுதியாக புதுச்சேரி, புதுவைப் பல்கலைக்கழகச் சமுதாயக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் அரங்க மு.முருகையன் நன்றியுரையாற்றினார்.

முன்னதாக வள்ளுவர் கல்லூரியின் முதல்வர் முனைவர் த. சாலை பற்குணன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

நிறைவு விழா (16.12.2018)

பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் இரண்டாம் நாளான 16.12.2018 நிறைவு விழாவில் முனைவர் அ. கோவிந்நராஜுஅவர்கள் “ஆய்வாளர்கள் வேர்களைத் தேடிச் செல்ல வேண்டும் விழுதுகளை நாடி அல்ல என்றும் தமிழ் மொழியைச் சிதைவின்றி கற்க வேண்டும் என்று தமிழ் மொழியின் சிறப்பு குறித்து” தலைமையுரை ஆற்றினார்.

மேலும் வள்ளுவர் கல்லூரியின் செயலர் திருமதி. ஹேமலதா செங்குட்டுவன் அவர்கள் தமது தலைமையுரையில் “வாழும் கலை மற்றும் வாழ்க்கையின் எதார்த்தத்தைப் பற்றியும் இளைஞர்களின் திறமைகள் பற்றியும்” தான் பார்த்த நிகழ்வுகளின் வழி பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து சிறந்த ஆய்வாளர்களுக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
மலேசியா தமிழறிஞர் முனைவர் முரசு நெடுமாறன், பிரான்சு வள்ளுவம் இதழின் இணையாசிரியர் தமிழறிஞர் தமிழ்த்திரு. பாமல்லன் மற்றும் சென்னை தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் மேலாளர் முனைவர் வே.திருநாவுக்கரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவின் நிறைவுப்பேருரையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையின் தலைவர் முனைவர் கோ. இரவீந்திரன் அவர்கள் “அறிவாக்கம் செய்பவர்களை உருவாக்கம் செய்ய வேண்டும் என்று தொடர்பியல் துறை சார்ந்த கருத்துக்களோடு தமிழ்ப் பண்பாடு தொடர்பான கருத்துக்களைப் பதிவு செய்தார்”.

இரண்டு நாட்கள் நடைபெற்ற கருத்தரங்க நிறைவு விழாவில் மன்னன்பந்தல் அ.வ.அ. கல்லூரியின் தமிழாய்வுத் துறைத் தலைவர் முனைவர் சு.தமிழ்வேலு அவர்கள் “உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை புரிந்த பேராளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் கருத்தரங்கம் சிறந்த முறையில் நடைபெற உறுதுணையாக இருந்த அமர்வுத் தலைவர்கள் அனைவருக்கும்
நன்றி தெரிவித்தார்.”

முன்னதாக வள்ளுவர் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கோ. பவானி அவர்கள் நிறைவு விழா வரவேற்புரையாற்றினார்.