THE CHALLENGE WILL BE SECURING DIGITAL

குற்றங்கள் தொடர்பான சான்றுகள் பதிவாகியுள்ள ஹார்ட் டிஸ்க் போன்ற டிஜிட்டல் ஆதாரங்களை பாதுகாப்பது வருங்காலத்தில் பெரிய சவாலாக இருக்கும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சைபர் சொசைட்டி ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில், இணைய குற்றங் களை தடுப்பது தொடர்பான பயிலரங்கம், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. பயிலரங்கை தொடங்கி வைத்து நீதிபதி பி.என்.பிரகாஷ் பேசியதாவது:

இன்றைய காலத்தில் மக்கள் வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் பேசவே விரும்புகின்றனர். அவை எப்படி பதிவாகிறது என்பது பொது மக்களுக்கு தெரியாது. தொழில்நுட்ப வல்லுநர்களிடம் கேட்டால், பிட்ஸ் அண்டு பைட்ஸ் என்ற வகையில் டேட்டாவாக பதிவாவதாக கூறு கின்றனர்.

ஒரு கொலைக் குற்றத்தில் சிசிடிவி கேமரா பதிவு போன்ற டிஜிட்டல் சான்று கிடைக்கும்போது அதை இணையத்தில் வெளியிடுவது, பென் டிரைவ் போன்றவற்றுக்கு மாற்றுவது போன்றவை நடைபெற்றால், அவற்றில் அடிப்படை ஆதாரம் எது என்பதில் நீதிமன்றத்துக்கும், காவல் துறைக்கும் குழப்பம் இருந்து வருகிறது. அதனால் சிசிடிவி கேமரா பதிவுக்கு பதிலாக, ஒட்டுமொத்த சிசிடிவி மற்றும் ஹார்ட் டிஸ்க் செட்டப்பையே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டியுள்ளது. இது தெளிவாக்கப்பட வேண்டும்.

2016-ல் நடைபெறும் ஒரு குற்றம் தொடர்பாக ஹார்டு டிஸ்ட், பென் டிரைவ் போன்றவற்றில் சேமிக்கப்பட்ட ஆதாரங்கள் சிக்குகிறது.அந்த வழக்கு 2020-ல் விசாரணைக்கு வரும்போது, அந்த டிஜிட்டல் ஆதாரங்கள், பூஞ்சை கள் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு தகவல்களை எடுக்க முடியாத சூழல் ஏற்படும். அதனால் சான்றுகள் பதிவாகியுள்ள ஹார்ட் டிஸ்க், பென் டிரைவ் போன்ற டிஜிட்டல் ஆதாரங்களை பாதுகாப்பது வருங் காலத்தில் பெரிய சவாலாக இருக்கும்

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடு களில் போலீஸாரிடம் வழங்கப்பட்ட வாக்குமூலம் செல்லுபடி ஆகும். ஆனால் இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் செல்லாது. அதனால் இந்திய சான்று ஆவணச் சட்டத்தில் மாற்றம் தேவைப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி பேசினார்.

இந்திய வங்கி மற்றும் நிதி மையத்தின் தலைமைச் செயல் அலுவலர் ஜெ.என்.மிஸ்ரா கூறும் போது, ‘‘வங்கிகள் கணினி மயமாக்கப் பட்டதால் பொறுப்புகள் அதிகரிக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இணையம் மூலம் நடைபெற்ற வங்கி பரிவர்த்தனை தொடர்பாக, டிஜிட்டல் சான்றுகள் கேட்கப்பட்டால், அதை வழங்க வங்கிகள் தயாராக இருக்க வேண் டும். அதனால் இணைய குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு வங்கிப் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்’’ என்றார்.

கல்லூரி மாணவர்களுக்கு இணைய குற்றங்கள் தொடர்பாக, சைபர் சொசைட்டி ஆஃப் இந்தியாவுடன் இணைந்து பயிற்சி வழங்கி வரும் கரூரைச் சேர்ந்த வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியின் தலைவர் கே.செங்குட்டுவனுக்கு நீதிபதி பிரகாஷ் பரிசு வழங்கி கவுரவித்தார். சைபர் சொசைட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் செயலர் வி.கபாலீஸ்வரன், அமைப்பின் பயிலரங்கத் தலைவர் வி.ராஜேந்திரன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.