மாணவர்களுக்கு சிறுசேமிப்பு பழக்கம் மிகவும் அவசியம்: மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவுறுத்தல்
எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்க மாணவர்களுக்கு சிறுசேமிப்பு பழக்கம் மிகவும் அவசியம் என கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் அறிவுறுத்தினார்.
கரூர் பசுபதிபாளையம் விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கரூர் வள்ளுவர் அறக்கட்டளை சார்பில் இலவசமாக பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு துவங்கி, வங்கிப்புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், 100 மாணவ, மாணவிகளுக்கு வங்கிப் புத்தகத்தை வழங்கி, முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் பேசியதாவது:
இன்றைய கால கட்டத்தில் மாணவர்களுக்கு சிறுசேமிப்பு என்பது மிகவும் அவசியம். எறும்புகள் தனக்கு வேண்டிய உணவினை சிறுக, சிறுக சேமித்து, மழைக்காலத்தை எவ்வித துன்பமும் இன்றி கடக்கின்றன. அதுபோல் மாணவ, மாணவிகள் தாங்கள் கல்வி பயிலும் காலத்திலேயே சிறுக, சிறுக சேமித்து வந்தால், எதிர்காலத்தில் பெற்றோர்களை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படாது. சிறுதுளி பெருவெள்ளம் போல் சேமித்து, நமக்குத் தேவையானவற்றை நாமே பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்றார். முன்னதாக விழாவுக்கு கரூர் வள்ளுவர் கல்வி அறக்கட்டளை தலைவர் க.செங்குட்டுவன் தலைமை வகித்தார். ராமகிருஷ்ணா ஆஸ்ரமத்தின் செயலாளர் சுவாமி அக்ஷரானந்தா மகராஜ், பாரத ஸ்டேட் வங்கியின் திருச்சி மண்டல முதன்மை மேலாளர் ஆறுமுகம், பள்ளி தலைமை ஆசிரியர், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.